காலனியாதிக்கத்தில் இந்தியாவின் செல்வத்தை பல வகைகளில் எடுத்து சென்ற வெளிநாட்டவர்கள் தற்போது மக்கள் வளத்தை , தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கேயோ இருந்து கொண்டு தங்களுடைய பொருட்களை சந்தை படுத்துவது என்பது வரை வந்திருக்கிறார்கள்.
வெளிநாட்டவர்கள் இந்திய மனதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்கார ஆணோ , பெண்ணோ இந்திய பாரம்பரியத்தை பின்பற்றுவதைப் போல வீடியோக்கள் வெளியிட்டால் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பல கோடி கணக்கான பார்வையாளர்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் வெள்ளைக்கார வீடியோ பெண்ணோ , ஆணோ நல்ல வருமானத்தில் வாழ்வார்கள். இதைப் போன்ற வீடியோக்களை பார்ப்பவர்கள் சராசரி இந்தியர்கள் என்று வைத்துக் கொள்ள முடியும்.
அடுத்த வகை தங்களை இந்தியாவிலேயே வாழும் தனித்தன்மை உடையவர்களாக எண்ணிக் கொள்பவர்களுக்கான வீடியோக்கள். அப்பர் மிடில்க்ளாஸ் என்று வைத்துக் கொள்ளலாம்.
கொரியா மற்றும் ஜப்பான் , ஸ்கேண்டிலேவியா , இங்கிலாந்த் நாட்டை சார்ந்தவர்கள் வெளியிடும் வீடியோக்கள் வெறுமனே வீட்டின் நிகழ்வுகளை யாரும் குரல் கொடுக்காமல் , முகங்களை காட்டாமல் மெல்லிய இசையுடன் காட்டப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு விர்ட்சுவல் ரியாலிட்டி போல பார்ப்பவர்கள் தாங்களே அந்த வீட்டில் இருந்து அனைத்தையும் செய்வதைப் போல உணர்வைத் தருகிறது. அங்கிருக்கும் வீடுகளில் அனைத்துமே பிராண்டட் பொருட்களாக மட்டுமே இருக்கின்றன. வாயிலில் போட்டிருக்கும் கால் மிதியில் இருந்து ஆரம்பிக்கிறது. தினந்தோறும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று . வீடு கூட்டுவதற்கு வேக்கீயூம் கிளீனர்கள் அதிலும் குறிப்பிட்ட பிராண்டுகள் தெரிய காட்டுவார்கள். தரையை துடைப்பதற்கு லிக்வுட்கள் . கிச்சனை காட்டுவார்கள், எப்போதுமே பளீரென்று மட்டுமே இருக்கும் நவீன அமைப்பு. அதில் அவர்கள் தினந்தோறும் சமையல் செய்வார்களா என்று கூட சந்தேகமாக இருக்கும். ஆனால் வீடியோவில் கிச்சனை சுத்தம் செய்வது போல் காட்டுவார்கள். அதற்கு தனி லிக்வுட்கள் மற்றும் சோப்புகள். கிச்சனில் பயன்படுத்தும் பொருட்கள் தனி வரிசை . பிரிட்ஜில் இத்தனை பொருட்களை அடுக்கலாமா என்பது போல அடுக்கியிருப்பார்கள். எல்லாமே கண்ணாடி கன்டெய்னர்கள் மட்டும் தான். பிளாஸ்டிக் உபயோகித்தால் உடலுக்கு நல்லதல்ல என்று காட்டி , கண்ணாடி கன்டெய்னர்களை எங்கே வாங்குவது என்ற குறிப்பையும் காட்டுவார்கள். டைனிங்க் டேபிளில் , கிச்சனில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுமே பீங்கான் கிண்ணங்கள் , தட்டுகள் தான் , அதுவும் விலையுயர்ந்தவை , இரும்பில் செய்யப்பட்டு வெளியில் வண்ணங்கள் பூசப்பட்ட அடுப்பில் வைக்கும் பாத்திரங்கள். சீஸனுக்கு தகுந்தாற் போல சமைக்கும் பாத்திரங்களும் மாறுகின்றன, வின்டர் கிச்சன் , சம்மர் கிச்சன், ஃபால் கிச்சன் என்று. அனைத்துமே மிக அழகாக இருக்கின்றன. பிறகு சமையல் அதற்கு பயன்படும் கத்திகள், காய்கறிகள் வெட்டும் பலகை , குப்பைகளை போடும் டஸ்ட்பின் என்று அவையும் பிராண்டுகள். சமையல் நடக்கும் போதே வாஸிங்மெசினில் துணிகளை போட்டு வாஸிங் மெசினுக்கும், அதில் போடும் லிக்வுட்கும் விளம்பரம். தினந்தோறும் விதவிதமாக நேரத்திற்கு நான்கு வகை சமையல்கள் செய்கின்றனர்.பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களுக்கு விளம்பரம். கண்களுக்கு இதமான வண்ணத்தில் வீட்டின் பெயிண்ட்டுகளும், பர்னிச்சர்களும் சுவற்றில் மாட்டியிருக்கும் படங்களும், வீட்டிற்குள்ளேயே வளர்க்கப்படும் சிறு செடிகளும் என பிராண்டுகள் சென்று கொண்டே இருக்கும். கழிவறை , குளியலறை அதில் எந்த விதமான சுத்தம் செய்யும் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் காட்டுவார்கள். அனைத்தும் முடிந்த பிறகு இரவு தூங்குவதற்கு முன் ஸ்கின் கேர் ரொட்டீன் என்று அதற்கு தனியான பிராண்டுகளின் விளம்பரங்கள்.
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக தொலைக்காட்சி விளம்பரங்கள் தேவையில்லை , இதைப்போன்ற வி_லாக் மட்டுமே போதும் ஒட்டுமொத்த வீட்டிற்கும் தேவையான அனைத்தையும்
ஒரு இருபது நிமிட வீடியோவில் தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகளில் அனைத்து விளம்பரங்களையும் , அமைதியாக ரசிக்கும் படியாக மாற்றியுள்ளனர். இதில் யாரும் விளம்பரங்களை கத்தி கத்தி கூவுவதில்லை. ஆனால் அமைதியான முறையில் அன்றாட நிகழ்வுகளில் காட்டுகிறார்கள்.
வீட்டையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் அது ஒவ்வொருவரின் கடமை தான். ஆனால் குறிப்பிட்ட பிராண்டுகளை உபயோகப்படுத்துவதனால் மட்டுமே குடும்ப பெண் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று நூதனமான முறையில் நம்ப வைக்கப்படுகிறது.
இதன் பார்வையாளர்கள் மிகப் பெரும்பாலும் இந்தியப் பெண்களே. இது முறையான தரவுகளின் அடிப்படையில் இல்லை. வீடியோக்களின் கமெண்ட் செக்ஸனில் இருக்கும் பெயர்களின் அடிப்படையில் கூறுகிறேன். கமெண்ட்களில், இப்படித்தான் நானும் என் வீட்டை வைத்துக் கொள்ள வேண்டும் , இந்த பொருட்களெல்லாம் பார்க்கும் போதே மகிழ்ச்சியை கொடுக்கின்றன , இது தான் வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று எழுதுகிறார்கள். சில பொருட்களை எங்கே வாங்க முடியும்? உங்களின் ஆடைகளை எங்கே வாங்கினீர்கள் என்று பார்வையாளர்களே அடுத்த விளம்பரங்களை நோக்கி செல்கிறார்கள். காட்டப்படும் அனைத்து பிராண்டட் பொருட்களும் எந்த வலைத்தளத்தில் வாங்குவது என்ற இணைப்பையும் வீடியோக்களில் கொடுத்திருப்பார்கள்.
சத்திய சோதனையில் காந்தி , பீங்கான் கிண்ணங்களை மட்டுமே பயன்படுத்துவதை பார்த்த அவரது அண்ணன் , வெள்ளை யானையை பிடித்து வந்திருக்கிறானே என்று ஆதங்கப்பட்டார் என்று எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது.
அந்த வீடியோக்களைப் போலவே நகல் செய்தவாறு காட்டப்படும் இந்திய கிராம வாழ்க்கை சொர்க்கம் என்ற பெயரில் வயல்களில் வேலை செய்து அங்கேயே குடும்பத்தை நடத்துவது போன்ற வீடியோக்களும் இருக்கின்றன. அதில் காட்டப்படும் வீடு மட்டுமே மண் சுவரும் , ஓலைக்கூரையும் போடப்பட்டது. உள் இருக்கும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்த மண்பானைகள் , பனை நார் கட்டில், மூங்கில் கூடைகள் , பித்தளையிலேயே அனைத்து சமான்களும் இருக்கும். அவையும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும் . பித்தளை பாத்திரங்களை எப்படி பளபளவென்று வைத்துக் கொள்வது என்பதற்கான பவுடர்களின் விளம்பரம் இழையோடும். பாரம்பரியமாக வாழ்வது போன்ற விளம்பரங்கள். வயலில் வேலை செய்வதும் , இரவில் நிலவை பார்த்துக் கொண்டு உணவு உண்பதும் தான் நிறைவான வாழ்க்கை என்று நம்ப வைக்கிறார்கள். அதிலிருக்கும் கமெண்ட்களை பார்த்தால் இது தான் வாழ்க்கை, இது தான் சொர்க்கம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் எழுதுகிறார்கள். உண்மையில் இந்த பாரம்பரியமாக வாழ்வது போல காட்டும் வீடியோவில் இருக்கும் பொருட்கள் தான் விலை அதிகமாக இருக்கின்றன. இந்த பாரம்பரிய பொருட்களை எங்கே வாங்க முடியும் என்பதையும் அதிலேயே கூறுகிறார்கள். குளிக்க ,முகத்திற்கு ஆயுர்வேத பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதும் அதன் பிராண்டுகளும் , பல் தேய்க்க ஆயுர்வேதம், இன்னும் எதைத் தான் ஆயுர்வேதமாக மாற்ற வேண்டும்? ஒரு வீட்டை நடத்த இத்தனை விசயங்கள் தேவைப்படுகின்றனவா? என்று மலைக்க வைக்கிறார்கள். இதற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டுகின்றன. வாழுகின்ற காலத்திற்கேற்ப சில புலங்கும் பொருட்கள் மாறித்தான் வருகின்றன. ஆனால் அதை வைத்திருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்ப வைத்தலின் நுண்வணிகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லக்சூரியாக வாழ்தல் தான் இப்போதைய சமூகத்தில் நீங்கள் தனித்திருப்பதன் அடையாளம் என்று எண்ண வைக்கிறார்கள். லக்சூரி என்பதன் பொருள் அந்தந்த தளத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.
கண்ணில் படும் அனைத்தையும் வாங்கு வாங்கு என்று எண்ண வைக்கிறார்கள். இதைத் தாண்டி அதிகமாக இருக்கும் வீடியோக்கள், சாப்பாடு , சாப்பாடு , சாப்பாடு தான். எங்கே சென்றால் என்ன வகையான ருசியில் உணவு கிடைக்கும்? என்னென்ன வகையான உணவுகள் , உணவகங்கள் , திண்பண்டங்கள் இதைப்பற்றி மட்டுமே பேசி வீடியோக்கள் அதற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம். இதிலும் விளம்பரம் மட்டுமே.
ஏன் நமக்கு உணவுப் பொருட்களின் மீது இவ்வளவு ஈடுபாடு என்றே தெரியவில்லை. அரைசாண் வயித்துக்கு தானே இதெல்லாம் என்று ஞானபதேசம் வேறு செய்கிறார்கள்.
சரிபாதி மீதமிருப்பவைகளில் செய்தி நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கும் , கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான விளம்பரங்களை செய்தி நிறுவனங்கள் , மக்களுக்கு உண்மையை கூறுகிறோம் நாட்டு நடவடிக்கைகள் என்ற பெயரில் வழங்கி வருகின்றன. அவற்றிற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம். அதைத்தவிர சினிமா பற்றி பேசுபவை , ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் பாலியியல் பற்றி பேசுவபர்கள், ஆடை , ஆபரணங்கள் , இயற்கை விவசாயம் என்ற பெயரில் விளம்பரம் செய்பவர்கள் என விளம்பரங்களால் மட்டுமே நிரம்பிய காணொளி ஊடகம்.
விளம்பர யுகத்தில் அனைவருமே மிதமிஞ்சிய நுகர்வோர்களாகவும் , விளம்பரங்களாகவும் , விளம்பரதார்களாகவும் மட்டுமே வாழ்கிறோம். விருப்பப் பட்டாலும் , படாவிட்டாலும் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு விளம்பர பலகை தானா? நம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்வதிலிருந்து ஏதோ ஒரு பொருளை வாங்கு வாங்கு என்று உணர்த்திக் கொண்டே இருப்பவர்களா நாம்?
- Manobharathi Vigneshwar