Skip to main content

மேல்சித்தாமூர்.....


நண்பகலில் பெய்த மழையில் பூமி இன்னமும் குளிர்ச்சியாக இருந்தது. காற்றிலும் குளிர் வாசனை அடித்தது. ஆனாலும் வானில் தண்ணென்ற வெளிச்சமும் இருந்தது. 
இதமான வெண்மை நிறத்தில் , கோபுரங்களில் இருக்கிறதா இல்லையா என்ற வண்ணத்தில் மெல்லிய பிங்க் நிறமும் , நுண்ணிய தங்க நிறமும் ஆங்காங்கே நேர்த்தியாக பூசப்பட்டிருந்த பெரிய மரக்ககதவுகளுடன் கூடிய மலைநாதர் ஜைன கோவில் . மழை பெய்யலாமா , வேண்டாமா என்ற தயக்கத்துடன் மேகங்கள் சூழ இருந்த மாலையில் மேல்சித்தாமூர் சமண கோவிலின் வெளியே நின்றிருந்தோம். 





கோவில் பூட்டியிருந்தது. சமண மடத்திற்கு செல்வோம் என்று சுற்றி வரும் போது பழையபாணி ஓடுகளுடன் கூடிய இரண்டடுக்கு வீடுகள். நிச்சயம் ஒவ்வொரு வீடுகளுக்கும் நூறாண்டு பழமை இருக்கும். ஒவ்வொரு வீட்டின்  வெளியேயும் இருபக்கங்களில் சிறு கல் தொட்டிகளில் நீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. அதில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நாய் சட்டென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தது. விலங்குகள் கூட ஊரின் தன்மையை கொண்டிருந்தன. மாலை நேரமும் கல்கட்டிங்களும், பழையபாணி வீடுகளும் பழம்பெருமை வாய்ந்த ஊர்களும் நம்மை தன்வசம் இழக்கச் செய்பவை. சமண முனிவர்கள் இதை போலவே  இவ்விடத்தில் நடந்து சென்றிருப்பார்கள் .அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் நடக்கிறோம் என்றே தோன்றியது. மனதில் ஏக்கமும் தவிப்பும் கூடிக்  கொண்டே  வந்தது. முனையில் திரும்பும் போது டீக்கடையின் எஃப்.எம் ரேடியோவிலிருந்து வந்த விளம்பர சத்தத்தில் அனைத்து எண்ணங்களும் சட்டென்று அறுபட்டன.

சமணமடத்தில் ஆட்கள் யாருமில்லை.  கற்கோவில் ஒன்று இருந்தது. பெரிய துளிகளாக  மழை விழ ஆரம்பித்தது. வேகமாக வந்து காரில் ஏறிக் கொண்டோம். கார் என்பது ஒரு நகரும் வீடு தானே.  இருநூறு ஆண்டுகளை கடந்த கற்கோவிலும் , கல் மண்டபங்களும் , இதைப்போன்ற எத்தனை மழைகளில் காலத்தின் மெளன சாட்சியாக நின்று கொண்டிருந்தனவோ. காரின் முன் கண்ணாடியின் வழியே நீரோவியமாக தெரிந்த மங்கலான கற்கோவிலும் , மண்டபமும் கனவில் இருப்பதை போன்ற தோற்றத்தை கொடுத்தன. சிற்றோடை பெருக்கெடுத்து வயலில் கலந்தது. மழையை இப்படி பார்ப்பதும் நன்றாக இருந்தது. மழை குறைய ஆரம்பித்தது. முற்றிலும் நின்றுவிட்டது. துடைத்து வைத்ததை போல வானமும் பூமியும் சுத்தமாக இருந்தது.


 கற்கோவிலுக்குள் சென்றோம். நுழையும் போதே வௌவால்களின் எச்சங்களின் வாசனை , அவை மழைநீரில் கலந்து இளம்பச்சைநிறத்தில் தரையெங்கும் சேறு போல் ஆகியிருந்தது. உள்ளே செல்வதற்கு தயங்கி திரும்பவும் வெளியே வந்தோம். ஏன் கோவில்களை பராமரிப்பதில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கற்கோவிலை சுற்றிலும் தார் ரோடு சென்றது. மழை ஈரத்துடன் வீசிய காற்றில் நடந்து அதை சுற்றியிருந்த வீடுகளை பார்த்தோம். ஜெயின் பெயர்களினூடாக சராசரி தமிழ்பெயரும் வீடுகளில் இருந்தன. மக்கள் பண்பாட்டில் எவ்வளவு இயல்பாக கலந்து விடுகிறார்கள் என்று தோன்றியது.  

திரும்பவும் காரில் ஏறி ஊரை விட்டு வெளியே வந்தோம். இங்கே சுற்றியிருக்கும் மலைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்ததாக வரலாறு இருக்கிறது.  "விழுப்பம் " என்று ஒரு கிராமத்தை தாண்டி வந்தோம்.  சட்டென்று எண்ணங்கள் அலைமோதி , "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் " என்ற குறளின் நினைவு வந்தது. விழுப்பம் என்றால் சிறப்பு. அப்படியென்றால் திருவள்ளுவரின் மதம்? . வானம் தெளிவாக இருந்தது. 

_ Manobharathi Vigneshwar