எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது இப்போது . தார் ரோடுகள் அனைத்து இடங்களையும் இணைக்கின்றன. பயணம் செய்யும் போதெல்லாம் அரசு நிர்வாகங்களை நினைத்து பெருமையாக உணர்கிறேன். வந்தவாசி அருகே தெள்ளாறை தாண்டி தேசூரை தாண்டி , தூணாண்டர் கோவில். இடையில் கீழ்நமண்டி அகழாய்வு செல்லும் வழி என போர்டு இருந்தது. முதலில் சீயமங்கலம் சென்றுவிட்டு வரும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றோம். கோவில் அருகே வரும் போதே அங்கே இருந்த அம்மா ஒருவர் வண்டியை அங்கேயே நிறுத்தசொல்லி பதட்டமாக வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு கோவிலின் முன் இறங்கி நின்றோம். இங்கதான் வந்தீங்களா? அந்தப்பக்க ரோட்டுல திரும்பிரூவீங்கலோன்னு நெனச்சு வண்டிய நிறுத்த சொன்னேன். அந்த ரோட்டுல நல்ல பாம்பு ஒண்ணு பத்தி விரிச்சு ரொம்ப மெதுவா நகந்து போயிட்டு இருந்துச்சு. ரெண்டு கை வண்ணத்துல இருந்துச்சு என்று பயமும் பரவசமும் பொங்க கூறினார்.
கோவில் கேட் பூட்டியிருந்தது. எப்போ திறப்பாங்க என்று கேட்டோம். வாட்சமேன் கிட்டதான் சாவி இருக்கும் , இந்த போர்டுல நெம்பர் இல்லீங்களா? என்றார் அந்த அம்மா.இல்லையென்று தலையாட்டிவிட்டு உள்ள மாடு மேயுதே என்று கேட்டவுடன், வாட்ச்மேன் வீட்டு மாடு தான் , காலையில தெறந்து மாட்ட மேயவிட்டுட்டு போயிருவாங்க என்றார்.
காலை பத்தரை மணிக்கு சென்றோம். வாட்ச்மேன் வருவதற்காக ஒரு மணி நேரம் காத்திருந்தோம். சாவியை எடுத்துட்டு வர்றேன் என்று பைக்கில் வந்து தகவல் சொல்லிவிட்டு சென்றார். சில இடங்களில் காலம் மிக மெதுவாக நகர்கிறது. சிறு வேலையை முடிப்பதற்கே அளவுக்கு மீறிய நேரங்களை எடுத்துக் கொள்கிறார்கள். நேரம் செல்வதைப் பற்றிய பிரக்ஞையே அவர்களுக்கு இல்லை. சாவியை தேட சென்றவர் திரும்பவும் ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை. திரும்பவும் கோவிலைத் தாண்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் சாவி எங்கே இருக்கிறது என்று கேட்டு மனைவியையும் பைக்கில் அழைத்து சென்றார். மறுபடியும் ஒரு மணி நேரம் போனது. நண்பகல் ஒரு மணிக்கு சாவியுடன் திரும்பி வந்தார் வாட்ச்மேன். கோவிலில் உச்சிகால பூஜை செய்வதற்காக பூசாரி ஒருவரும் எங்களுடன் சேர்ந்து காத்திருந்தார். உண்மையில் புலம்பிக் கொண்டிருந்தார். வாட்ச்மேனின் சம்பளம் குறித்த புலம்பல் தான். மாசம் பொறந்தா தொண்ணூறாயிரம் சம்பளம் வாங்கறான். ஆனா கோயில கூட நேரங்காலத்தில தெறக்கிறதில்ல , நமக்கெல்லாம் ஒரு ஆயிரம் ரூவா கூட வரமாட்டேங்குது என்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார்.
கேட்டை திறந்துவிட்டு சென்றார் வாட்ச்மேன். அகழாய்வு செய்து எடுத்த குடைவரைக்கோவில். தமிழகத்தின் முதல் நடராஜர் சிற்பமும் , துவாரபாலகர்கள் மற்றும் நந்தி சிற்பமும் இங்கிருந்து தான் அடுத்தகட்ட கலை வளர்ச்சி பயணத்தை தொடங்கின. 7_ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் காலத்தில் செதுக்கிய குடைவரைக் கோவில். பின்பு சோழ மன்னர்களாலும் , விஜயநகர பேரரசுகளாலும் பராமரிக்கப்பட்ட கோவில். கோவில் உள்ளே நுழையும் போது வெளவால்கள் மற்றும் புறாக்களின் எச்சங்களின் வாசனை. மாதம் தொண்ணூறாயிரம் சம்பளம் வாங்குபவர் ஒரு இரண்டாயிரம் ரூபாயை செலவு செய்து கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றியது. சன்னதிக்கு சென்றோம். சிவலிங்கம் கருவறையை நிறைத்து காட்சி அளித்தது. மேற்கு திசையை பார்த்த சிவலிங்கம். மரகத அம்மனுக்கும் பூஜை நிகழ்ந்தது. நாங்கள் முதல் நடராஜர் சிற்பம் எங்கே இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தோம். ஒரு தூணில் இருந்தது. இது தானா அது என்பதும் சந்தேகமாகவே இருந்தது. நடராஜரின் சடை முடியும் , நடன கோலத்தையும் வைத்து சிலையை புரிந்து கொண்டோம். நாங்களே அகழாய்வு செய்து கண்டுபிடித்ததை போல பெருமை வந்தது. 7-ஆம் நூற்றாண்டுங்க என்றேன் பெருமை மிகு குரலில். நாம் வாழும் பூமி எத்தனை கோடி ஆண்டுகள் பழமையானது தெரியுமா? இங்கிருக்கும் மலை எத்தனை கோடி ஆண்டுகள் பழமையானது? இவற்றிலெல்லாம் இல்லாத பெருமை ஒரு சிற்பத்தை பார்க்கும் போது ஏன் வருகிறது உனக்கு? என்றார். ஏனென்றால் என பேசும் போதே எனக்கான சொற்களை கண்டு கொண்டேன். பூமி , வானம், மலை , காற்று எல்லாம் பழமையானவை தான் ஆனால் மனிதன் சிந்திக்க தொடங்கி அவனின் சிந்தனையில் உதித்ததை மற்றவர்களுக்கு கடத்த அவன் கண்டு கொண்ட முதல் மொழி இது தானே. அந்த மனிதனின் கலை தொடங்கிய எண்ணத்தை அதை செயலாக்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன் . அதுவல்லவா இன்று நிலவை சென்று ஆராயும் எண்ணம் செயலாவது வரை நீண்டிருக்கிறது என்றேன் நான். ம்ம் என்ற புன்னகையுடன் கடந்து சென்றார் என் கணவர். அவருக்கு அறிவியலைப் பற்றி பேசினால் மட்டுமே நிறைவடைவார். தீப ஆராதனை கண்ணில் ஒற்றிக் கொண்டு வெளியே வந்தோம். முருகர் சன்னதி சிறு குன்றின் மேல் இருபது படிக்கட்டுகளுடன் இருந்தது. மேலேறி பார்த்தோம் கோவிலின் பக்கவாட்டில் ஒரு ஏரி இருந்தது. நீர் இல்லை பசும்புற்கள் முளைத்திருந்ததால் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரே ஒரு குத்துக்கல் ஏரியின் நடுவே செங்குத்தாக நின்று கொண்டிருந்தது.
இந்த ஊர் மக்கள் யாரும் கோவிலுக்கு வருவதில்லையா என்று கேட்டோம். எல்லாம் விவசாய வேலைக்கு போறவங்க சாமியெல்லாம் கும்பிட அவங்களுக்கு நேரமிருக்காது என்றார் பூசாரி. வர்றவங்க எல்லாம் சென்னையிலிருந்து தான் பெரிய பெரிய ஆட்கள் தான் பிரதோஷத்தப்போ வருவாங்க என்றார்.
கோவிலை விட்டு வெளியே வந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சமணர் உறைவிடத்திற்கு சென்று பார்த்தோம். தூரத்தில் பார்க்கும் போது இரும்பு படிக்கட்டுகள் துருப்பிடித்திருப்பதை போல தோன்றியது. அருகில் சென்று ஏறும் போது தான் தெரிந்தது சிமெண்ட் படிக்கட்டுகள் மெல்லிய பச்சை நிற பெயிண்ட் கரைந்து போயிருந்த காரணத்தால் அது போல காட்சியளித்தது என.
ஒரே மூச்சில் மேலேறினோம். ஏறியவுடன் மூச்சு வாங்க உட்கார்ந்தோம். கொஞ்சம் இயல்பானதும் சமணர் குடைவரையின் உள்ளே எட்டிப் பார்த்தோம். பூட்டியிருந்தது. உள்ளே ஒரு மகாவீரர் சிற்பம் வெள்ளை நிற டைல்ஸ்கள் ஒட்டிய மேடையின் மேல் வைக்கப்பட்டிருந்தது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாட்டி , மல மேல முருகன் கோயிலுன்னு வேல் நட்டி வெச்சோம். சிவப்பு நிற பிளாஸ்டிக் டப்பாவில் தக்காளி சாதத்தை சாப்பிட்டு கொண்டிருந்த பாட்டி மெதுவாக பேச்சு கொடுத்தார்.
ஆனா அதெல்லாம் பண்ண கூடாதுன்னு கவுருமெண்ட்ல இருந்து வந்து வேல எடுத்திட்டாங்க என்றார் அங்கலாய்ப்புடன்.
சமணர்களின் கோட்பாடு எந்த உயிருக்கும் தீங்கிழைக்க கூடாது என்பது தான். அதனால் தான் விவசாயம் கூட செய்யக்கூடாது என்பது அவர்களின் மரபு. இதையே காரணமாக வைத்து வணிகத்தில் ஈடுபட்டார்கள். இன்று இந்தியாவில் வணிகத்தில் பெரிய பங்கு வகிப்பவர்கள் சமண மதத்தை சார்ந்தவர்களே. வணிகம் என்பது யாருக்கும் தீங்கிழைப்பது அல்ல என்பது அவர்களின் புரிதல். வணிகம் தீங்கிழைப்பது அல்ல சுரண்டல் தான். மகாவீரருக்கு வணக்கம் செலுத்திவிட்டு கீழே இறங்கினோம்.
வெயில் கழுத்தை சுட்டது. இனி எங்கே என்றார் என் கணவர். கீழ்நமண்டி அகழாய்வு நிகழும் இடத்திற்கு என்றேன். கூகுள் மேப்பில் வரைபடத்தை பார்த்து ஓட்ட ஆரம்பித்தார். வயல்வெளிகளுக்குள் ஒற்றைவழி தார்ரோடு மழையினால் சிதைந்து வெறும் கற்களோடு காட்சியளித்தது. கண்டிப்பாக போக வேண்டுமா என்றார். என் முகத்தை பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் வண்டியை ஓட்டினார். வயல்வெளிகளினூடாகவே சென்றது. முள் மரங்களின் கூட்டம் இருபுறமும். நல்லது கோடு போட்டுவிடும் என்று கூறிக்கொண்டே ஓட்டினார். கீய்ச்ச்ச் என்ற சத்தத்துடன் ஒரு கோடு விழுந்தது. என்னை முறைத்து பார்த்தார். எனக்கும் மனதை என்னவோ செய்தது. சரி எப்படியும் போய் பார்த்து விடலாம் என்று சென்றோம். வயல்வெளி ரோடு முடிந்தவுடன் அழகான தார் ரோடு ஒன்று ஊருக்குள் சென்றது. அடடா , நாம் இந்த ரோட்டை பிடித்திருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே கீழ்நமண்டி நோக்கி பயணம் செய்தோம். பெரிய கால்வாய் ஒன்று செந்நிற நீருடன் ஒரு பக்கத்தில் இருக்க நடுவில் மண்சாலை ஒன்று சென்றது.கீழ்நமண்டி அகழாய்வு செல்லும் வழி என்று போர்டு இருந்தது.
கால்வாய் பெரிதாகி கொண்டே வர, பாதை சிறிதாகி கொண்டே வந்தது.
பாதி தூரம் ஓட்டியதும் திடீரென்று தோன்றியது. இதற்கு மேல் இந்த வண்டியில் உள்ளே செல்வது உசிதமல்ல என்று. வண்டியை ஒரு கிலோமீட்டர் ரிவர்ஸ்லியே எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். தார் ரோட்டில் நிறுத்தி எங்கேயெல்லாம் கோடு விழுந்திருக்கிறது என்று பார்த்தோம். இப்போ எங்க ? என்றார். பாண்டிச்சேரி 2 மணி நேரம் காட்டியது. சரி கடற்கரைக்கு சென்று விட்டு வீட்டிற்கு போவோம் என்று கிளம்பினோம். இருபுறமும் புளிய மரங்கள் சூழ நடுவில் அகலமான பெரிய தார் ரோடு சென்றது. பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறு பையன்கள் பைக்கில் மூன்று மூன்று பேராக வேகமாகவும் , கூச்சல் போட்டு கொண்டும் ஓட்டிச் சென்றார்கள்.
ஜி.எஸ்.டி ரோட்டை தொட்டதும் கேம் விளையாடுவது போல வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். பாண்டிச்சேரியை நெருங்கும் போது எழுப்பினார். ட்ராபிக் கான்ஸ்டபிளின் தொப்பி வித்தியாசமாக இருந்தது. ஏனென்று கேட்டேன் கணவரிடம். இங்க பிரெஞ்சுக்காரங்க ஆட்சில இருந்ததால் அவர்களின் அடையாளமாக சிலவற்றை பின்பற்றுகிறார்கள். அதைத்தான் அவர்களின் பாரம்பரியமாக எண்ணிக் கொள்கிறார்கள் என்றார். அடிமைபட்டதன் அடையாளத்தை அல்லவா மாற்ற வேண்டும் என்றேன். பிரெஞ்சுகாரர்களிடம் அடிமையாய் இருந்ததை பெருமையாக நினைக்கிறார்கள் என்றார். பேசிக் கொண்டே டிராபிக்கில் நின்றிருந்த போது பின்னால் பைக்கில் வந்த ஆசாமி வேகமாக கார் பம்பரை இடித்த சத்தம் கேட்டது. என்னவென்று சற்று தள்ளி நிறுத்திவிட்டு பார்ப்பதற்குள் ஆசாமி ஓடியே போய்விட்டான். பம்பர் முற்றிலுமாக கழன்றுவிட்டது. காலை முதல் இருந்த உற்சாகம் சட்டென்று வடிந்தது. சரி விடு அதையே நெனைக்காத , பத்தாயிரம் செலவு ஆகும், அவ்வளவுதான் என்று என்னை சமாதானப்படுத்தி விட்டு கடற்கரைக்கு அழைத்து சென்றார். நடைபயணம் மேற்கொண்டிருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் அறுபதை நெருங்கியவர்கள். பெஞ்சுகளில் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். சோகமே உருவாக ஆனால் இயற்கையில் அதை கரைத்துவிட்டதாக இன்னுமும் புன்னகை எஞ்சியிருப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு பெண் அமர்ந்திருந்தார். அர்பிந்தோ கடை ஒன்றிற்கு சென்றோம். மெழுகுவர்த்திகள் அழகாக இருந்தன. கைவினைப் பொருட்கள் தான் அதிக விலையில் இருந்தன. மெழுகுவர்த்தியையும் , வாசனை திரவியத்தையும் வாங்கிக் கொண்டு கேக் ஷாப்பில் நுழைந்தோம். பிரவுனியும் ஐஸ்கீரிமும் வாங்கிக் கொண்டு கடற்கரையின் பாறையின் அமர்ந்தோம். மாலை நேரத்து காற்று வெயிலின் வாசனையுடன் இருந்தது. சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது இரவின் குளிர் வாசனையுடன் காற்று வீச ஆரம்பித்தது. நீர் வெள்ளிக் கோடுகள் போல அலையடித்துக் கொண்டிருந்தது. திரும்பவும் சிறிது தூரம் நடந்தோம். காந்தி சிலையின் அருகே வந்தோம். இச்சிலையின் சிறப்பே காந்தி அகன்ற மார்புடன் இருப்பது தான். நான் கையெடுத்து வணங்கிவிட்டு வந்தேன். இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்கும் அரசு பிரெஞ்சு ரெஸ்டாரண்ட் வந்தோம். லசானியா வாங்கி கொடுத்தார். ஏன் நமது நாக்கிற்கு கொழுப்பு உணவு மிகப் பிடிக்கிறது என்றே தெரியவில்லை. கடற்கரை காற்றில் தற்போது இன்னமும் குளிர் கூடியிருந்தது. காரை எடுத்துக் கொண்டு கருங்குழிக்கு வந்தோம். நாளையும் ஒரு பயணம் இருக்கிறது.
_ Manobharathi Vigneshwar