Skip to main content

மகாத்மா என்ற மனிதர்

  


மகாத்மா காந்தி அவர்களின் சத்திய சோதனை வாசித்து முடித்தேன். தமிழ் இணைய நூலகம் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருகிறது.

https://www.tamildigitallibrary.in/ )   . அதை எனக்கு வழி காட்டிய கடலூர் சீனு சார் அவர்களுக்கு மிக்க நன்றி. அதிலிருந்து தான் ,  சத்திய சோதனை, அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, போன்ற தேசிய உடமையாக்கப் பட்டுள்ள பதிப்பில் இல்லாத நிறைய நூல்களை வாசிக்க இயன்றது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்தியாவும் விஷ்ணுபுரம் கெளஸ்தூபம் பகுதியில் வரும் பொலிவை இழந்த நகரம் போலத் தான் இருந்தது. ஆனால் அதை முற்றிலும் அழிந்து விடாமல் காப்பாற்றி மறு கட்டமைப்பு செய்தது காந்தி, அம்பேத்கர், நேரு, படேல், மற்றும் பல தலைவர்கள்  தான்.  புத்தகத்தில் ஐந்து பாகங்கள்  இருந்தது, அவரின் இளமைக் காலம் தொடங்கி , பாரிஸ்டர் படிப்பு, தென்னாப்பிரிக்கா  (நேட்டால்) காங்கிரஸ், தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம், சம்பரான் சத்தியாகிரகம்,ஒத்துழையாமை இயக்கம், நாகபுரி காங்கிரஸ் ஆரம்பம், கைராட்டினத்தின் வளர்ச்சி வரையில் இருந்தது. 

காந்தியின் மீது அவதூறுகள் எவ்வளோ இன்னமும் சொல்லி வருகிறார்கள். அவர்களில் யாரேனும் காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தால் கொஞ்சம் அறிவு பெறலாம் என்று தோன்றுகிறது. 
காந்தி என்பவர் நம்மைப் போலவே சாதாரண மனிதர் தான், அவரின் வாழ்க்கையில் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியாகவே இருக்க முடியாது. அவர் எல்லா வேலைகளிலும் Trail and Error ஆகத் தான் பரீட்சித்துப் பார்த்து பின்னர் அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார். அதில் சில வெற்றிகளும் தோல்விகளும் இருக்கவே செய்யும். அவர் இளமைக் கால வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவரின் அடுத்த வந்த வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் ஒரு வகையில் அவரை செதுக்கியிருக்கிறது. உதாரணமாக அவர் அரையாடைக்கு மாறியது, இங்கிலாந்து பாரிஸ்டர் படிப்பு படிக்கும் போது ஹேமச்சந்திரர் என்பவரை சந்திக்கிறார், அவரின் ஆடை முறை காந்தியின் மனதில் பதிகிறது. என்றேனும் இது போன்று தன்னால் இருக்க முடியுமா என்று எண்ணுகிறார்.  அது எத்தனையோ காலத்திற்கு பின்னர் மதுரையில் நடக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து நாளிதழில் ஒரு செய்தி, ஒரு ஓரமாகத் தான் இருந்தது.ஆனால் அது எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது. தென்னாப்பிரிக்காவில் இந்திய மாம்பழ வகை ஒன்று பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் அங்கே நிலத்தை தயார் செய்து வருகிறார்கள் என்று.  இந்தியாவின் அதிகாரம் பரந்து வருகிறதோ என்று எண்ணி கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் இருந்தது.
ஆனால் சத்திய சோதனை படித்த போது தான் தெரிந்தது, அங்கே பயிர் செய்வதற்காக அடிமைகளாக (ஒப்பந்த கூலிகள் என்ற பெயரில்) இந்தியர்களை , ஆங்கிலேயர்கள் எப்போதோ  கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று.

காந்தி ஏன் இந்தியர்களின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை. ஏன் ஆங்கிலேயர்களிடம் கூட கருணையுடன் நடந்து கொண்டார். ஏன் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு அதிக பணத்தை கொடுக்கும் படி உண்ணாவிரதம் இருந்தது ஏன்? ஏன் அம்பேத்கரை பூனா ஒப்பந்தத்திற்கு வலியுறுத்தினார் என்பது வரை. இதற்கெல்லாம் காந்தியின் வாழ்வை புரிந்து கொண்டால் மட்டுமே , அவரோடு சேர்ந்து அந்த பயணத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது மட்டுமே உணர முடிகிறது. தென்னாப்பிரிக்காவில் அவர் சந்தித்த வெவ்வேறு நாட்டை சேர்ந்த மனிதர்களும் அவர்களுடனான உரையாடல்களும் , நட்பும், உழைப்பும், வாழ்வும்,  இன்னமும் சொல்லப் போனால் இந்தியாவைப் பற்றிய ஒரு மேலோட்டமான ஒரு வடிவமே அவருக்கு தென்னாப்பிரிக்காவில் தான் கிடைக்கிறது. காந்தியின் கொள்கைகள் , அது உருவான சூழல், அப்போதிருந்த நிலைமை , மற்றும் அந்த கொள்கைகள் சமூகத்தில் தீர்க்க முற்பட்ட பிரச்சினைகள் என்ன என்பதையும் வைத்தே காந்தியை புரிந்து கொள்ள முடியும். காந்தியை முழுமையாக புரிந்து கொள்ள  அவரின் கொள்கைகளை தனித்தனியாக பார்த்து மூர்க்கத்தனமாக அதை பின்பற்ற முயன்றோம் என்றால்,  we will be missing the forest for the Tree's.we shouldn't be grasping the finger of principles and miss out the palm of gandhi.அவருடைய பயணம் ஒட்டு மொத்த மனித குலத்தை மனிதநேயம் நோக்கி செல்லவே , அமைதியான, ஆரோக்கியமான, தன்னிறைவான உலகத்தை உருவாக்கவே முயல்கிறது. இதில் அவரால் எந்த மனிதனையும் பிரித்து பார்க்கவே முயல்வதில்லை. 

பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொரு மனிதனும், மக்களின்  குணங்களை சந்திக்க நேரும் போது, அவர்களை வெறுத்தே , அடுத்த படிநிலையை அடைய முடியும்.அவர்கள் தான் ஆட்சியாளர்களாகவும் ஆக முடியும்.அதனால் தான் அவர்களால் வலிமையான ஆட்சியை நடத்தவும் முடியும். 
காந்தி ஏன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்பதும் சத்திய சோதனை படித்த போது தான் தெரிந்தது. ஏனெனில் அவருக்கும் பொது வாழ்வில் ஈடுபடும் போது,  மக்களின் குணங்கள் (பணக்காரர்கள்,ஏழை,சாதி மத பேதமின்றி எல்லோரிடமும்) தெரிய வந்தாலும், ஒருபோதும் அவர்களை வெறுத்து ஒதுக்க முயல்வதில்லை. அவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கான வழியையே செய்கிறார். மக்களுக்கு வன்முறையின் மேல் தான் ஆர்வம் இருந்தாலும், அதில் அவர்களை மிகச் சுலபமாக ஈடுபடுத்தியிருக்க முடியும் என்றும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.ஆனால் அதனுடைய பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் தெரிந்தே இருந்தது.அதனால் தான் அவர் அஹிம்சையை பரப்பினார். மக்களை ஒருபோதும் அவரால் விலக்கி வைக்க முடிவதில்லை. மனிதர்களை நேசிப்பவர்,       ஆட்சியாளராக இருக்க முடியாது. அதனால் தானோ என்னவோ அவர் இந்திய சுதந்திரத்தின் போது ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார்.

   இந்திய தேசம் முழுக்க அவரது பயணம், பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள். இப்போது கூட  இரயிலில்  முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு அதே அளவிற்கான தீவிரத்துடன் அனுபவம் கிடைக்கும். மக்கள் இன்னமும் அப்பிடியே தான் இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவர் சந்திக்கும் பிராமணர் , இப்போது வரைக்கும் அப்பிடியே தான் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நம்முடைய காணிக்கையை பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் , அந்த பாவம் நமக்கே பாவம் சேரும் என்ற பயமுறுத்தல் இருக்கிறது. ஆனால் காந்தி அப்போதே காணிக்கை வேண்டாம் என்றால் அந்த காசை திருப்பி எடுத்துச் செல்லும் அளவிற்கு மூட நம்பிக்கை இல்லாதவராகவே இருக்கிறார்.நல்ல வேளை எனக்கு அப்போது மகாத்மா பட்டம் கொடுக்கவில்லை என்று அவர் சொல்லிச் செல்லும் இடங்களில்  நம்மையும் சேர்த்து சிரிக்க வைக்கிறார்.

துணி ஆலை முதலாளிகளிடம் அவருடைய உரையாடல்,அதைப் படிக்கும் போது அப்படிப்பட்ட சூழலில் கூட வணிக நோக்கத்துடன் செயல்பட்ட இந்திய துணி ஆலை அதிபர்களின் மேல் கோபம் வருகிறது.ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் கூட காந்தி மிக அமைதியாகவே தன்னுடைய தீர்மானத்தை அவர்களிடம் முன் வைத்து செல்கிறார்.

மருத்துவ முறைகளில் அவருக்கு இருந்த குழப்பமும், அறிவியல், அல்லோபதி வைத்தியத்தை ஏற்றுக் கொள்ளாத மனமும், பொது வாழ்வில்(அரசியலில்) எடுத்த சில தவறிய தீர்மானங்களும் , மனைவியினிடத்தில் எடுத்துக் கொண்ட அதிகாரங்களும் , அவர் நம்மைப் போலவே , சராசரி மனிதர் தான் என்பதை, எல்லாவற்றிலும் அவர் சரியான முடிவையே எடுத்திருக்க வேண்டும் என்று , அவரின் மீது அவதூறுகள் கற்பிப்போருக்கு புரிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தன்னுடைய பிள்ளைகளின் கல்வி முறையில் அவர் நடந்து கொண்ட விதமும் , ஏற்றுக் கொள்ள முடியாததாகவே  இருக்கிறது. அவர்களுக்கு வாழ்வின் முறையில் கல்வியை கற்பிக்க முயற்சிக்கிறார்.ஆனால் அந்த முறையெல்லாம் நன்றாக வளர்ந்த தன்னிறைவான மனித குலத்துக்கான கல்வி முறை, அதை அந்த காலகட்டத்தில் அவர் முயற்சித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.

எந்த ஆளுமைகளைப் படித்தாலும், வெண்முரசின் கதாபாத்திரங்களுடன் அவர்களை ஒப்பிட்டு பார்க்க முடியாமல் இருக்க முடிவதில்லை.

கர்ணணுக்கு நேரும்  தாழ்ந்த குலம்,சூத்திரன், சூதன் எனும் அவமதிப்புகள், காந்திக்கும் கறுப்பன், இந்தியன், என்று தென்னாப்பிரிக்காவில் நேருகிறது. கர்ணன் எவ்வளவு மன திடத்துடன் இருந்து யாவற்றையும் சகித்து முன் செல்கிறானோ அதே போல் காந்தியும் அந்த அவமதிப்புகள் எல்லாவற்றையும் சகித்து முன் செல்கிறார். நேட்டால் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்குகிறார்.போனிக்ஸ்-ல் குடியேற்றத்தை உருவாக்குகிறார். சத்தியாகிரகப் போராட்டத்தில் வெற்றி பெறுகிறார்.

காந்தியிடம் தருமனின் அறக் குழப்பமும் இருக்கிறது.(தென்னாப்பிரிக்கா போயர் யுத்தத்தில் பங்காற்றியது, இரண்டாம் உலகப் போருக்கு படையை திரட்டியது) இதில் யாவற்றிலும் வெண்முரசில் வரும் தருமனின் அறக் குழப்பத்தையே நினைவூட்டுகிறது.

பீமனின் உடல் வலிமை என்றால் , காந்தியிடம் மன வலிமை மிகுந்துள்ளது. அதை தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார்.செயல் படுத்தியிருக்கிறார். 

அர்ஜூனனுக்கு காண்டீபம் போல் காந்திக்கு சத்தியாகிரகம் (அஹிம்சை) ஓர் வலிமையான ஆயுதம்.

பீஷ்மர் அஸ்தினபரி விட்டு நகர் நீங்கிச் செல்வதே , திரும்பவும் அந்த நகரை வந்தடையத் தான். காந்தி மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் அவரை மீண்டும் அற வழியில் செல்வதற்கான பாதையில் தொடர்ந்து செல்வதற்கான உத்வேகத்தை அளிப்பது தான்.

கிருஷ்ணனிடம் இருக்கும் அனைவரையும் அனுசரித்து தன் வழிக்கு கொண்டு வரும் பண்பும், அது சரிப்படாத போது போரின் மூலம் வழிக்கு கொண்டு வருவதும் காந்தியிடம் உள்ளது. ஆங்கிலேய அதிகாரிகளிடம் முடிந்த வரை சமரசமாக இருந்து தன்னுடைய போராட்டங்களையும், தீர்மானங்களையும் முன்னெடுத்து செல்கிறார். அது சரிப்படாத போது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கிறார்.

ஜெயகாந்தன் அவர்களின் கங்கா எங்கே போகிறாள் என்ற நாவலின் இறுதி அத்தியாயத்தில் சில வரிகள் பின் வருமாறு,

சரயு நதியிலே ராமன்
பூமி  பிளந்து சீதா தேவி
தெரியாமல் பட்ட அம்பினால் கிருஷ்ணன் 
என்று முடியும். 

இதைப் படிக்கும் போது, இவர்கள் அனைவரும் அவர்களின் நோக்கமும், இலட்சியமும் நிறைவேறிய பின்னர் வாழ்வு போதும் என்று முடிவெடுத்த போது தான் உலக வாழ்வை நிறைவை செய்கிறார்கள், அதற்காகவே ஒவ்வொரு நிமித்தமும் அவர்களின் இறுதி கணத்தை நடத்துகிறது என்று தோன்றியது. 

காந்திக்கும் அது தான் நிகழ்ந்ததா? அவரின் நோக்கமும் பயணமும் இந்திய சுதந்திரத்துடன் முடிந்ததா?
அவருடைய ஊழ் அது தானா? 

இன்றைய தலைமுறை சத்திய சோதனை புத்தகத்தை படிப்பதால் பின் வரும் பலன்களை அடைய முடியும்.

1. தன்மீட்சி

காந்தி , படித்து முடித்ததும் உடனடியாக அந்த படிப்புக்கு உண்டான வேலையில் பெரிதாக வெற்றி பெறுவதில்லை. படிப்பு வேறு அதை நடைமுறைப் படுத்தும் போது வரும் சிக்கல்கள் வேறு. அதில் தனக்கு ஆரம்பத்தில் எழுந்து பேசக் கூட தைரியமில்லாமல் நீதி மன்றத்தை விட்டு வெளியேறிய காந்தியும், ஆனால் அதையே நினைத்து துவண்டு விடாமல் அடுத்து வந்த சில வருடங்களில் வழக்காடுவதில் அவர் பெற்ற புகழும் தன்மீட்சி தான்.

2. உலகியல் வேறு, பொதுப் பணி வேறு

பொதுப் பணியில் ஈடுபடும் பலர் இன்று பொதுப் பணத்திலேயே வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஆனால் காந்தி தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கு தன்னுடைய வக்கீல் தொழில் மூலம் சம்பாதித்து தான் வாழ்க்கை நடத்துகிறார். அவருடைய கனவுகளுக்காக உலகியலை ஒருபோதும் விட்டுவிடுவதில்லை.

3.பயணங்களை மேற்கொள்ள வழிமுறைகள்;

குறைவான பணத்தில், இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். காசு விசயத்தில் கறாராக சிக்கனமாக இருந்திருக்கிறார். முடிந்த வரை  கால்நடையாகவே நகரங்களை சுற்றிப் பார்த்திருக்கிறார். எல்லா விதமான மக்களுடனும் பயணித்திருக்கிறார். அதிக சிரத்தை தேவைப்படாத ஆடைகள் என தன்னந் தனியான பயணம்.என்ன அப்போது அவரிடம் கேமரா இல்லை. அனைத்தையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். இருந்திருந்தால் இப்போது இருக்கும் (Life of Ram_சினிமா பாடல்)  காந்தியை சித்தரிப்பதாகவே தோன்றுகிறது. பயணம் மேற்கொள்ள விரும்புவோர்க்கான குறிப்புகளும் சத்திய சோதனையில் இருக்கிறது.

4.அநீதிக்கான குரல்

இப்போது பரவலாக இருப்பது வெறும் துவேச உணர்வுகளும்,எதிர் மறையான எண்ணங்களும், வன்முறையை கிளர்த்தும் பேச்சுக்களுமே உள்ளன. அது ஒருவரது வாழ்வையே அழித்து விடும் அபாயம் உள்ளது. ஆனால் காந்தி அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கிறார், அது எதையும் தீர அலசாமல் வரும் வெற்றுக் கூச்சல் இல்லை.எதையும் ஆராயாமல் களத்தில் இறங்குவதில்லை. எல்லா தரப்பினர்களின் நிலைப்பாட்டையும் புரிந்து கொண்டு, அதில் அறம் எதுவோ அதை நோக்கியே பயணம் செய்கிறார்.சட்டத்தை மதித்து அதிகாரிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறார்.
எந்த காலத்திலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரே போல் தான் இருக்கிறார்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவிலும், சுதந்திரம் அடைந்த குடியரசு இந்தியாவிலும் சரி. அவர்களும் சராசரி மனிதர்கள் தான்.அவர்களுக்கு இடப்பட்ட பணிகளை அவர்களின் எல்லைக்குட்பட்டே செய்து வருகிறார்கள். எனவே அவர்களிடம் தேவையில்லாத வன்முறை உணர்வைத் தவிர்த்து , அவர்களுடன் இணைந்தே சமூகத்திற்கான எந்தவொரு நன்மையையும் செய்ய முடியும். காந்தி செய்தது அது தான்.இப்போது இருப்பவர்களும் அதை பின்பற்றினால் தனிப்பட்ட முறையில் வாழ்வை இழப்பதை தவிர்க்க முடியும்.

5.ஆன்மிகம்

ஆன்மீகம் என்பது வெறுமனே கடவுளை வணங்குவது அல்ல. அது அனைத்து மதங்களையும், அதன் அடிப்படைகளையும் ஆராய்ந்து, அதன் சாரங்களை எடுத்துக் கொண்டு, அதில் மெய்மையை அடைவது என்பதையே செய்கிறார்.

6.சமூகத்துடனான தொடர்ந்து உரையாடல்
அவர் எந்த தனிமனிதனுக்கும் வெறும் உபதேசத்தை கொடுப்பதில்லை. எல்லா தரப்பினருடனும் தொடர்ந்து உரையாடலில் இருக்கிறார்.அதிலிருந்து தானும் கற்றுக் கொள்கிறார்.

7.எழுதி தன்னை தொகுத்துக் கொள்ளுதல்

தற்போது ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய வாழ்வை செம்மைப்படுத் எடுத்துக் கொள்ளும்  journling என்று சொல்லப்படுகின்ற எழுதித் தன்னை தொகுத்துக் கொள்ளும் முறையும் காந்தி செய்கிறார்.நிறைய எழுதுகிறார் அதன் மூலமே தன் பணியையும் தன்னையும் அறிந்து கொள்கிறார்.

இது போன்று சத்திய சோதனை படிக்கும் ஒவ்வொருவருக்கும், அவர்களின் அகத் தேடல் பொறுத்து நிறைய விசயங்களை அள்ளிக் கொள்ள முடியும்.

காந்தியுடனான பயணம்  , சராசரி மனிதர்களுக்கு சோர்வைத் தரும்.உடனடியான எந்த பலனையும் தராது. ஆனால் தன்னிறைவான சமூகத்திற்கு  அவருடைய தொலைநோக்கு பார்வை மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். 

சத்திய சோதனை (முழுமை) ஒலி வடிவில்: 

காந்திக்குள் ஒரு அம்பேத்கரும், அம்பேத்கருக்குள் ஒரு காந்தியும் இருக்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். காந்தியை வாசித்தேன் இப்போது அம்பேத்கரையும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.மிக்க நன்றி.