Skip to main content

ஆலயக்கலை வகுப்பின் முதல் நாள் முதல் பகுதி

அதிகாலை நான்கு மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. ரமாமணியும் , லக்ஷ்மி அம்மாவும் ஹீட்டர் போட்டு தண்ணீரை சூடுபடுத்திக் கொண்டிருந்தனர்.  

நான் பச்சை தண்ணீரையே எடுத்து குளித்துவிட்டு வெளியே வந்தேன். குளிரான பிரதேசங்களில் , பச்சை தண்ணீரில் குளித்துவிட்டு வெளியே வருவது குளிரை குறைக்கும் என்பது கடந்த இரண்டு வருடங்களில் நானாக கண்டு கொண்ட உண்மை. மலைப்பகுதியில் சீக்கிரம் வெளிச்சம் வந்துவிடுகிறது. ஒவ்வொருவராக நித்யவனத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். அதை வேடிக்கை பார்ப்பதே ஆனந்தமாக இருந்தது. வருபவர்களின் முகத்தில்  மலர்ச்சியும் , கொஞ்சம் பதட்டமும் , கேள்வி பாவனையும் , நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ளும் போது வரும் சிரிப்பும் , பயணத்தினால் வந்த களைப்பும் என பலவித முகபாவங்கள். 

காலை உணவு முடிந்ததும் புத்தருக்கும் , சரஸ்வதிக்கும் ஆசிரியர் மாலை அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் குரு நித்யா கூடத்திற்கு வந்தோம். ஜெயக்குமார் சார்  பாடல் பாடி  துவக்கினார்.

மணி அண்ணா மேடையில் தோன்றி , ஆசிரியர் வகுப்பு எடுத்து முடிக்கும் வரை யாரும் எதுவும் கேள்வி கேட்காதீர்கள். உங்களுடைய கேள்விகளை எழுதி வைத்துக் கொண்டு வகுப்பு முடிந்ததும் ஆசிரியரிடம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் என்றார். மணி அண்ணாவின் வழிகாட்டல் வகுப்பை மிக கூர்மையுடன் கவனிக்க உதவியது. இடையில் தோன்றும் சந்தேகங்களினால்  எண்ணத்தை அலைபாய விடாமல் , கேள்வியை எழுதி வைத்துக் கொண்டு தொடர்ந்து வகுப்பில் கவனத்தை செலுத்த முடிந்தது.   

வகுப்பு ஆரம்பமாகியது.
ppt - யில் ஆசிரியருடைய பெயர் சு. ஜெயக்குமார் என  இருந்தது. நான் அதை சுஜெய்குமார் என்றே படித்தேன். என் அக்காவின் கணவர் பெயர்‌ அது தான் என்பதால் அப்படியே படித்துவிட்டேன் போலும். 

பாறையிலிருந்து முகத்தை மட்டுமே வெளிக்கொணர்ந்து  தன் பயணத்தை துவங்க இருக்கும்  யானையின் சிற்பம் ஒன்றை காட்டினார். அசோகர் காலத்து சிற்பம் . ஒரிசாவில் தவுளி எனும் இடத்திலுள்ள இந்தியாவின் முதல் பாறை ( rock cut architecture ) சிற்பம்.  எனக்கு அகலிகையும் , ராமனும் நினைவிற்கு வந்தார்கள்.

நீள நீளமான வாக்கியங்களில் மிக வேகமாக சொல்லிக் கொண்டே சென்றார் ஆசிரியர். இரண்டரை நாட்களில் எவ்வளவு கற்பிக்க முடியுமோ அவ்வளவையும் கற்பித்து விட வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தின் வேகத்திலேயே வகுப்பும் இருந்தது. நான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த வேகத்தில் சில நேரம் என்னுடைய எழுத்து எனக்கே புரியாமல் போய் விடுமோ என்று சிறு அச்சம் வந்தது. ஆனாலும் தொடர்ந்து அதே வேகத்தில் தான் குறிப்புகள் வந்து கொண்டிருந்தன. எப்படியும் அவர் கூறும் கதைகளை நான் மறக்க மாட்டேன் என்பது நிச்சயம். அதனால் குறிப்பிட்ட காலகட்டங்கள் , பெயர்கள் , இடங்கள், புத்தகங்கள்  இவற்றையெல்லாம் மட்டுமே குறிப்பெடுத்துக் கொண்டேன்.

கோவிலுக்கு செல்வது என்பது காலப் பயணம் போன்றது. கோவிலுக்கு வெளியே நாம் நிற்கும் போது 21-ஆம் நூற்றாண்டு , உள்ளே நுழைந்தால் கோவில் கட்டப்பட்ட காலத்திற்குள் சென்று விடுவோம் என்றார். 

ஒரு முறை அவர் பல்லவா ஸ்டைல் architecture என்று கணபதி ஸ்தபதி அவர்களிடம் கூறிய போது , நீ இசையில் இருப்பவன் தானே ! உங்களுடைய ராகங்களை பல்லவா ஸ்டைல் , பாண்டியா ஸ்டைல் ராகங்கள் என்று கூறுவீர்களா ? கலைகளுக்கு காலகட்டம் மட்டுமே உண்டு. ஆட்சியாளர்களின் ஸ்டைல் இல்லை என்று கூறியதாக கூறினார். 

கோவில் என்ற அமைப்பு பாரதத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது நாம் பார்க்கும் கற்றளிகளுக்கு முன்னதாகவே கோவில்கள் மரங்களாலும் , உலோகங்களாலும், செங்கல்களினாலும்  கட்டப்பட்டிருக்கும் என்றார். பாடல் பெற்ற தலங்கள் என்ற கோயில்களில் பாடல் பாடப்படும் போது அக்கோவில்களின் material வேறு வகையாக இருந்து பின்னர் கற்றளிகளாக மாற்றப்பட்டிருக்கும் என்றார். 

கோவில்களுக்கு தல புராணங்கள் 10 & 12 - ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது என்றும், நாயக்கர் காலத்தில் தல புராணங்கள் விரிவாக எழுதப்பட்டு , மராட்டியர் காலம் வரை தல புராணங்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வந்துள்ளது என்றார்.

உ.வே.சா - வின் என் சரித்திரம் என்ற புத்தகத்தில் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று அதற்கான தல புராணங்களை / மகாத்மியத்தை எழுதி ஊதியம் பெற்றுக் கொண்டதாக குறிப்பு வருகிறது என்றார். 

கோவிலை பார்த்தல் :
1. கலை , பண்பாட்டு மரபுகள்
2. வழிபாடுகள் , பூசனைகள் , சடங்குகள்
3. தொன்மங்கள் , தல புராணங்கள்
4. ஆன்மீக தத்துவ மரபுகள்
5. வரலாற்று சின்னங்கள்
6. கோயில் கலைகளின் இசை , நடன , நாடக மரபுகள்

Sree ரங்கம்  கோவிலை எடுத்துக் கொண்டால் அங்கே அரையர் சேவை , வீணை ஏகாந்தம், நாதஸ்வரம் முக்கியமானதாக இருக்கிறது என்றார்.

ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி இசை மரபுகள் உண்டு உதாரணமாக திருவெண்காடு கோவிலுக்கு மோகனராகம் என்பது தான் நியதி என்றார்.
திருவெண்காட்டை குறிப்பிடும் போதெல்லாம் அவருடைய முகத்தில் தனியொரு வெளிச்சம் வந்தே சென்றது. அந்த நிமிடத்தில் அவர் திருவெண்காட்டிலேயே இருப்பது போல் உணர்கிறார் போல. 

கோவில்களின் கல்வெட்டுகளை வாசிக்க வேண்டும் என்றார். 
தொல்காப்பியத்திலேயே நடுகல் வழிபாடு ( புலிகுத்தி கல் ) பற்றிய குறிப்பு வருகிறது . விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் நாய்க்கு நடுகல் இருக்கிறது , தன்னுடைய எஜமானின் ஆடு/ மாட்டு பண்ணையை நரி/ புலியிடம் இருந்து காப்பாற்றிய போது ஏற்பட்ட சண்டையில் மாய்ந்த நாய்க்கு மரியாதை செய்யும் வகையில் நடுகல் வைத்து வழிபட்டிருக்கலாம் என்றார்.

 ஆலமுற்றம் என்பது ஆலயத்தை குறிக்கும்.

சங்க இலக்கியங்களில் சிவன் என்ற பெயரை இல்லை. ஆனால் உருவகம் உள்ளது.
பிறவா யாக்கைப் பெரியோன் - சிவன்
உச்சிக்கிழான் - சூரியன்

கி.மு 3 - கி.பி 6 ( சங்க காலம் )

முதல் மூன்று ஆழ்வார்கள் - 5 ஆம் நூற்றாண்டு.
காரைக்கால் அம்மையாரின் காலம் 5 -ஆம் நூற்றாண்டு என்றே குறிப்பிடப்படுகிறது.
திருவாலங்காட்டு பதிகம் பாடியவர். முதல் பதிகமும் , முதல் அந்தாதியும் பாடியவர் இவரே என்றார்.

காரைக்கால் அம்மையார் தலையால் படியேறி வரும் போது பார்க்கும் பார்வதி தாயார் யார் இவள் என்று கேட்க , வருபவள் நம்மை காக்கும் அம்மை  என்றறிக என்கிறார் சிவன். பிறவா  யாக்கைப் பெரியோனுக்கும் அம்மையானவர் காரைக்கால் அம்மையார்.

கிபி. 5-9 -ஆம் நூற்றாண்டு வரை பக்தி இலக்கிய காலகட்டம்.

வைணவ கோவில்கள் - மங்களாசாசனம்

சைவக் கோவில்கள் - தேவாரப் பாடல்கள்

அப்பர்  7-ஆம் நூற்றாண்டு. ஞான சம்பந்தர் இளையவர் ஆனால் சம காலத்தவராக கருதப்படுகிறார். 

பெருக்கு ஆறு சடைக்கு  அணிந்த பெருமான் - பாடல் சிவனின் ஆலயங்களை பற்றிய குறிப்புகளை தருகிறது.

ஆழ்வார்கள் காலத்திலேயே பாண்டியர்கள் குடைவரை கோயில்களை கட்டினார்கள்.

கருங்கல்லில் வைத்து கட்டுவது 5 - ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் சாளுவன் குப்பம் என்ற இடத்திலுள்ள புலிக்குகைக்கு அருகே சுனாமிக்கு பின் கடல் உள்வாங்கிய போது  கி.பி இரண்டாம் நூற்றாண்டு கல் கட்டிடம் ஒன்று தென்படுவதாக கூறினார். 

காஷ்யப சில்ப சாஸ்திரம்

1. ஆலயம்
2. ப்ரஸ்தாரம் - கோவில் கட்டமைப்பு

பெரும்பாணாற்று படை - காஞ்சியின் புகழ்
தண்டி - காவிய நூல்- அவந்தி சந்திரி கதா என்ற புத்தகத்தில் 96 வகையான விமானங்களை கொண்ட கோவில்களை எழுப்பக்கூடியவர்களாக காஞ்சி ஸ்தபதிகளை பற்றிய குறிப்பு வந்திருக்கிறது. இப்போது நாலரை லட்சம் வகையான விமானங்களின் வகைகள் உள்ளது.

கோயில் எழுப்ப அவசியமானவை :

1. வாஸ்து சாஸ்திரம்
2. சில்ப சாஸ்திரம்
3. ஆகம சாஸ்திரம்

வஸ்து - Material - ஆற்றல்மிக்க பொருள்
வாஸ்து - Space - கட்டிமுடிக்கப்பட்ட இடம்.

அப்படி பார்க்கப்போனால் இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு செல் முதல் பல செல்களால் ஆன மனிதன் வரை ஒவ்வொருவருமே வாஸ்து தான் என்றார். இந்த வாக்கியம் மூச்சை அடைத்து மூளையில் ஒரு முடிச்சை அவிழ்க்க செய்து சட்டென்று ஒரு பிரகாசத்தை கொடுத்தது. அனைத்து அறிவு வாசல்களையும் திறக்கும் ஒரு மந்திரக்கோலாக நான் வாஸ்து எனும் வார்த்தையை பிடித்துக் கொண்டேன். 

வாஸ்து , வாஸ்து என்று நிறைய முறை மனதிற்குள்ளேயே  கூறி மகிழ்ந்து கொண்டேன். உடனடியாக என் கணவரிடம் இதைக் கூற வேண்டும் என்று தவிப்பு கூடிக் கொண்டே சென்றது.

வாஸ்து சாஸ்திரம்

1. Energy , Matter
2. Space , Time
3. Light , Sound


வ்யூகம் - அமைப்பு - Formation
பத்மகார வ்யூகம் - நகரம் அல்லது கோட்டையை தாமரை வடிவத்தில் அமைப்பது.
1. மதுரை ஆலவாய் நகர் - கூடல் நகர் பெருமாள் பத்மகார வ்யூகத்தின் நடுவில் இருப்பவர்

2. காஞ்சியில் - சென்னகேசவ பெருமாள் நகரின் மையத்தில் இருப்பவர்.


சப்த பிரம்மம் - வாக் - ஒலி - ஒலியின் பருவடிவம் அர்த்தம் ( பொருள் - physical thing )

1. இடத்தை தேர்வு செய்வது
2. விமானம்
3. பொருள்

மகாசாயி பதம் - வடிவம் எப்படி வர வேண்டும் என்பது

தஞ்சாவூர் விமானத்திற்கு அடித்தளமாக  - மானாசாங்குலம்- 6 1/2 அடி

1. பூசணிவடிவ கற்கள்
2. தேங்காய்வடிவ கற்கள்
3. குரங்கின் தலை போன்ற கற்கள்

சிற்ப சாஸ்திரம் - திருமேனிகளின் , இறைவனின் உருவங்கள் , எந்த பொருளினால் அமைக்கப்பட வேண்டும் . 

எஜமானன் - கோயில் அமைக்க பொருளாதார ரீதியாக காரணமாக இருப்பவர்.

ஸ்தபதி - கோயிலை கட்டி எழுப்புபவர்

ஆச்சாரியார் - இறைவனை வழிபட பூஜைகள் செய்பவர்.

ஆகம சாஸ்திரம் - தொன்றுதொட்டு வரக்கூடிய அறிவு.
திருமேனிக்கு எவ்வாறு பூஜைகள் செய்ய வேண்டும் என்று சொல்லுவது.

1. சைவ ஆகமங்கள் - 28 
உப ஆகமங்கள் - 207
2. வைணவ ஆகமங்கள் - 108
      1. பஞ்சராத்ரம்
      2. வைகானஸம் 
3. சாக்த ஆகமங்கள் - 77

செங்கற்களாலும், மரத்திலும் கட்டப்பட்ட கோயில்கள் 150 ஆண்டு காலம் இருந்திருக்கலாம். 

கி.பி 4-ஆம் நூற்றாண்டு உண்டவல்லி குகைகள் சாதவாகனர்களுப்பின்

குவாய் தீவில் இறைவன் ஆலயம் அமெரிக்கர்‌‌ ( சிவசுப்பிரமண்ய சுவாமிகள்)  இறைவிருப்பத்தால்  V. கணபதி ஸ்தபதி அவர்களால் கட்டப்பட்டது. 

சிற்பச் செந்நூல் - V.கணபதி ஸ்தபதி
ஆகம நூல்கள் - Encyclopaedia of agamas

Institute of French - ஆகம நூல்கள்
Pondicherry Library - ஓலைச்சுவடி பாதுகாப்பு

வாஸ்து சாஸ்திரம் - ஸ்பாத்திய வேதம் - V . கணபதி‌ ஸ்தபதி

புராணங்கள் எழுதப்பட்ட காலத்திலேயே , ஆகமங்களும் எழுதப்பட்டிருக்கலாம் என்றார். 

சக்தி & சாக்தா - Sakthi & Shakta - Book 

ஆகமங்கள் - 2500 வருடங்களாக இருக்கிறது.
தமிழ் பக்தி இலக்கியத்தில் ஆகமங்கள் வருகிறது.
28 - சைவ ஆகமங்கள் பட்டியல்- திருமூலர்- திருமந்திரம்- 5 - ஆம் நூற்றாண்டு. 

ஆகம பாதங்கள் : 

1. சரியை - ஆசாரங்கள் - கடமைகள்
2. க்ரியை - கர்மா தீக்ஷ் பேதங்கள் - Action
3. யோகம் - தியான முறைகள் - ஆச்சார்யர்கள், அர்ச்சகர்கள்
4. ஞானம் - தத்துவங்கள்

வேத நிகமம் - நிகம மரபு

1. பிரமாணங்கள்
2. ஆரண்யகங்கள்
3. சம்ஹிதை 
4. உபநிடதங்கள்

தற்போது சரியை, க்ரியை மட்டுமே ஆகம நூல்களாக கிடைக்கின்றன.

1. காமிக ஆகமம்
2. காரண ஆகமம் 

இவை தற்போது அனைத்து கோயில்களிலும் நடைபெற்று வருகிறது.

சாக்த ஆகமங்கள் - தந்திரங்கள் - வங்கம் , ஒரிஸ்ஸா , கேரளா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கிறது.

கெளமார ஆகமம் - முருகனுக்கு

When you watch the bird , the bird watches you - Salim Ali -யின் சொற்றொடரை  குறிப்பிட்டு இறை வழிபாடும் அத்தகையதே என்றார்.

கோயிலுக்கு சென்றால் கடவுளை வழிபடும் போது நாம் மட்டும் அவரை பார்ப்பது நோக்கு ( திருஷ்டி ) . கடவுளும் நம்மை பார்க்க வேண்டும் அதற்கான உளநிலையோடு மட்டுமே இறைவனை வணங்க வேண்டும் அது தான் தரிசனம் என்றார். தியான உளக்குவிப்பு வகுப்பில் குரு.தில்லை செந்தில் பிரபு ஆசிரியர் அவர்களும் இறைவனை வழிபடுவதை பற்றி இதே போல் தான் கூறினார். 

சரி இனி மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை 5 மணிக்கு வகுப்பிற்கு வந்துவிடுங்கள் என்றபடி முதல் நாள் முதல் பாதி வகுப்பு முடிந்தது.

Ppt-யில் துறை சார்ந்த அனைத்து தகவல்களும் இருப்பதால் வகுப்பில் நான் கவனித்து எழுதியதை மட்டுமே இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

முதல் பாதி வகுப்பில் நான் எழுதி வைத்துக் கொண்ட கேள்விகள்.

1. வாஸ்து சாஸ்திரம் கற்றுக்கொள்ள முறையான வகுப்புகள் எங்கே நடக்கின்றன ?
2. நகரங்கள்  ஆகம விதிப்படி அமைக்கப்படா விட்டால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா ?
3. கேரளா,வங்கம், ஒரிஸ்ஸா மாநிலங்களில் சாக்த வழிபாடும் , கம்யூனிசமும் தழைத்து வளர்ந்ததற்கான காரணங்கள் என்ன? 

- Manobharathi Vigneshwar