Skip to main content

நித்யவனத்தை நோக்கிய பயணம்....

 நான் நித்யவனத்திற்கு செல்லும் மூன்று நாட்களுக்கும் சேர்த்து சுலபமாக சமையல் செய்வதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். 

தோசை மாவு இருந்தால் போதும் எப்படியும் என் கணவர் சமாளித்து விடுவார் என்று எண்ணினேன். ஆனால் தொட்டுக் கொள்வதற்கு உண்டான பொடியை செய்ய வேண்டும். கொள்ளுப்பொடி , இட்லி பொடி , கருவேப்பிலை பொடி என மூன்று வகை பொடிகளை செய்து விட்டேன் . புதினாவும் , கொத்துமல்லி தழையையும் சேர்த்து ஊறுகாய் செய்தேன். தக்காளி தொக்கு செய்து வைத்தேன். இவற்றையெல்லாம் வைத்து மதியத்திற்கு சாதம் வடித்து சாப்பிட்டு விடுவார். பாசிப்பயிறை ஊற வைத்து முளைகட்டியவுடன் கிளாஸ் கண்டெய்னரில் வைத்து பிரிட்ஜில் வைத்து விட்டேன். கேரட்களை தோள்சீவி நீளமாக நறுக்கி அதையும் பிரிட்ஜில் வைத்தேன். ஒரு லிட்டர் பாலை காய்ச்சி தயிர் செய்து அதையும் பிரிட்ஜில் வைத்தேன். இது போதும் என்று பெருமூச்சு விட்டபோது ஆடைகள் பற்றிய எண்ணம் வந்தது. மூன்று நாட்களுக்குண்டான ஆடைகளை அயர்ன் செய்து அடுக்கி வைத்தேன். சரி இனி என்னுடைய பயணத்தை துவங்கலாம் என்ற நிம்மதி வந்தது. 

வீட்டிற்கு வந்து இவையனைத்தையும் பார்த்தவர் , அட இதெல்லாம் ஏன் செஞ்ச? நானே பண்ணிப்பேனே என்றார். என் பொண்டாட்டிக்கு எம்மேல எவ்ளோ அக்கறை என்று சிரித்தார். அக்கறையெல்லாம் ஒண்ணுமில்ல உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு உங்களுக்கே தெரியணும்ல அதுக்காகத்தான் என்றேன். என்னுடைய நினைவுகள் அவருடன் எப்போதுமே இருக்க வேண்டும் என்ற பரிதவிப்பு எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது. காளிதாசனுடைய காவியத்தின்  பாதிப்பாகவும் இருக்கலாம்.

இந்த காவியத்தை பற்றிய உரையாடல் எங்களுக்குள் கடந்த ஒரு வார காலமாக நடந்து கொண்டிருந்ததால் உடனடியாக என் கணவர் சிரித்தார். 
இங்க பாரு , துஷ்யந்தன் வேணுமுன்னே தான் அரசியல் காரணங்களுக்காக சாகுந்தலைய  மறந்தான். காவியம் அப்பிடி வர முடியாதுல்ல. காளிதாசன் கவிச் சுதந்திரத்த எடுத்து காவியம் படைச்சிட்டார். அவ்வளவு தான் சரியா ?  உன்னைய நான் மறக்கிறதுக்கு எனக்கு எந்த அரசியல் காரணமும் இல்ல தாயே என்று கும்பிட்டார். 

மறைமலைநகரில் ரமாமணி மற்றும் லக்ஷ்மி அவர்களுடன் சேர்ந்து செல்வதாக பயணத்திட்டம். 

காலை எட்டுமணியளவில் அவர்கள் இருந்த இடத்திற்கு சென்றோம். உள்ளே நுழைந்ததும் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஏராளமான முதியவர்கள் மகிழ்ச்சியுடன் தென்பட்டனர். கேடிவியில் போடும் படங்களும் , வணிக, கேளிக்கை இதழ்களின் சிறுகதைகளும் பெரும்பாலும் முதியோர் இல்லத்தில் பெற்றோரை கொண்டுவிடும் இதயமற்றமவர்களாக பிள்ளைகளையும் , தங்கள் பிள்ளைகளுக்காகவே ஏங்கும் அப்பாவிகளாக,  பாவப்பட்டவர்களாக பெற்றோர்களையும் சித்தரித்திருப்பார்கள். ஆனால் இப்போது பார்க்கும் காட்சியில் பெற்றோர்கள் தொல்லைகள் இல்லாமல் மிக மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள். நல்லவேளையாக முற்போக்குவாதிகள் இதையெல்லாம் வேறு வகையான கசப்பில் கொண்டு சேர்க்கவில்லை. 

ரமாமணி அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அவருடைய அம்மா இருந்தார். கிட்டத்தட்ட 89 வயது ஆகிறது என்றார்கள். மிக அழகாக கனிந்த வயதில் இருந்தார்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. 

இப்ப பசங்க எல்லாரும் வெளி நாட்டில இருக்காங்க. நாங்க சேர்த்து வச்ச சொத்து, நிலம் , வீடு எல்லாமே அவங்களுக்கு சுமையா தெரியுது. உங்க சொத்தையெல்லாம் எங்களால பராமரிக்க முடியாது. அதை எங்களுக்கு எழுதியும் வெக்காதீங்க.  இருக்கிற வரைக்கும் சொத்தெல்லாம் வித்து நல்லா செலவு பண்ணிட்டு சந்தோசமா வாழுங்கன்னு சொல்றாங்க. ஆனா எங்களுக்கு எப்படி செலவு பண்றதுன்னே தெரியலை. சேர்த்து வச்சே பழக்கப்பட்ட தலைமுறை நாங்க என்றார் ரமாமணி. பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடைய கணவர் வந்தார். 

அங்கே இருக்கும் பெரும்பாலான முதியவர்களுக்கு பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் தன்னை வந்து பார்ப்பதில்லை என்பதெல்லாம் ஒரு பெரிய விசயமாகவே தெரியவில்லை. எல்லாருக்கும் அவுங்கவுங்க வேலை இருக்கும்ல என்றே இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை அவர்களெல்லாம் வந்து போய்க் கொண்டிருந்தால் தங்களுக்கான வேலைச்சுமை அதிகமாகும். அதை பிள்ளைகள் தவிர்ப்பதில் அவர்களுக்கு பெரு மகிழ்ச்சியே இருக்கிறது என்பதை முகத்தை பார்த்தாலே  புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் சொத்து வேண்டாம் என்று கூறும் தலைமுறையை நினைத்து கவலைப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். பணம் தேவையில்லை என்று கூறும் ஒரு தலைமுறையின் மன நிலையை அவர்களால்  புரிந்து கொள்ளவே இயலவில்லை .

லக்ஷ்மி அவர்களை சந்தித்த போது மிக உற்சாகமாக கையசைத்துக் கொண்டே வந்தார். பயணம் முழுவதும்  வெண்முரசை பற்றிய உரையாடல் தான். பவானியில் ஜமுக்காளம் வாங்க வேண்டும் என்று பேசி வைத்தோம்.

கோவிலில் ஏன் சில மக்களை அந்த காலத்தில் அனுமதிக்கவில்லை என்பதற்கான அவர்களுடைய வாதம் சரி என்று மிக மென்மையாக முன் வைத்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் பேசி முடித்ததும் வாட்சப் எடுத்து பார்த்தேன். ரம்யாவின் updates-ல் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் ஆலய நுழைவுப் போராட்டம் பற்றிய தமிழ்விக்கி பதிவின் இணைப்பு இருந்தது.அவரவருக்கு அவரவர் நியாயம் என்பது எப்போதுமே பொருந்தாது என்றே தோன்றியது... 

காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கிய பயணம் . மாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தியூரை அடைந்து விட்டோம். அங்கிருந்து நித்யவனத்திற்கு செல்லும் மலைப்பாதை தொடங்கியது.

 தாமரைக்கரையெல்லாம் தாண்டி மேடு பள்ளமான சாலையில் வண்டி செல்லும் போது எஃஎம்மில் , ஹுய்யா புது ரோட்டுல தான் , ஹுய்யா நல்ல ரோட்டுல தான் என்ற பாடல் வந்தது. இந்த பாட்டுக்கு ஒண்ணும் கொறைச்சலில்ல என்று வெறுப்புடன் எஃஎம்மை அணைத்தார் டிரைவர். மனதிற்குள் சிரிப்பாக வந்தது. ஏன் மேடம் உங்களுக்கு படிக்கிறதுக்கு சென்னையில எல்லாம் எடமே இல்லையா ? இங்க தான் வரணுமா என்று கேட்டார். சரி, சரி விடுப்பா , பாத்து வண்டிய ஓட்டுங்க என்றார் லக்ஷ்மி அம்மா. 

நித்யவனத்தின் முகப்பில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 









நித்யவனத்திற்கு ஐந்தரை மணியளவில் வந்து சேர்ந்தோம். மணி அண்ணா சாவியை கொடுத்து விட்டு வேலையாக வெளியே சென்றார். சூரியன் மேற்கு மலையில் மறைய ஆரம்பித்தது. அதை புகைப்படம் எடுத்துவிட்டு திரும்ப நேரில் பார்க்கும் போது முழுவதுமாக மறைந்து விட்டது. 





அறையில் சென்று பொருட்களை வைத்துவிட்டு வெளியே நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க சென்றோம். இரவு ஒன்பது மணிக்கு சாப்பிட வர சொல்லி அய்யா வந்து கதவை தட்டினார். ரமாமணி மற்றும் லக்ஷ்மி இருவரும் வேண்டாம் என்று கூறினர். நான் மட்டும் சாப்பிட சென்றேன். 

உப்புமா செய்திருந்தார்கள். சாப்பிட்டு முடித்து விட்டு மணி அண்ணாவுடன் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கான கேள்விகளை நான் கேட்க மணி அண்ணா பதில் கூறி தெளிவு படுத்திக் கொண்டே இருந்தார். நிர்க்குண பிரம்மம் , சகுண பிரம்மம் பற்றி அவர் கூறிய போதே , எனக்கானது சகுண பிரம்மமே என்று நான் முடிவு செய்து விட்டேன். அந்த மகிழ்ச்சியான மனநிலையிலேயே அன்றிரவு உறங்கிப் போனேன். நாளை காலை முதல் ஆலயக்கலை வகுப்பு துவங்க இருக்கிறது. 

28.03.2024
- Manobharathi Vigneshwar